Skip to main content

90's கிட்

 டீக்கடை, காலை 6:30...  இன்னும் எத்தனை காலத்துக்கு சைக்கிளை மிதித்து கொண்டிருப்பாயென அவரை ஒருவர் இடைமறிக்கும் போதுதான் கவனிக்க நேர்ந்தது.  அவரின் தோற்றத்தை வைத்து வயது 30+ என சொல்லலாம்.  இல்லண்ணே என ஆரம்பித்த அவர், இதுவே போதுமானதாக இருப்பதாக அர்த்தமளிக்கும் ஒன்றினை அவர் பேசி முடிக்கும் போது என் டீ ஆறிவிட்டது.  ஒரே விஷயத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விதமாக சொன்னார்.  அது முற்றிலும் இயலாமை சம்பந்தபட்ட விஷயம்.  வார்த்தைகளின் ஊடே அந்த இயலாமை மறைந்து இருந்தது, அவரின் பேச்சின் வீரியத்திற்கு பயந்து வெளிவர தயங்கியது என்பதே உண்மை.

வண்டியை பற்றிய பேச்சு இப்பொழுது கல்யாணம் நோக்கி திரும்பியது.  வரும் மாரியம்மன் கோவில் பொங்கலுக்குள் கல்யாணம் பண்ணி ஜோடியாக இதே ரோட்டில் அப்படி கெத்தா நடப்பேன் பாருங்கன்னு அவர் சொல்லும் தொனிக்கு கண்கள் சிறிது கலங்கியது என்னமோ உண்மை.  எப்படி என விளக்க தெரியவில்லை, காரணமும் புரியவில்லை.

Photo by <a href="https://unsplash.com/@afcurtis?utm_source=unsplash&utm_medium=referral&utm_content=creditCopyText">Austin Curtis</a> on <a href="https://unsplash.com/photos/l--XtlGjFPI?utm_source=unsplash&utm_medium=referral&utm_content=creditCopyText">Unsplash</a>
தன் அண்ணனின் கல்யாணத்தில் லட்சம் செலவானதென வருத்தப்பட்டார்.  கோடீஸ்வரன் கல்யாணத்துல கூட பாதாம் பால் வைக்க மாட்டாங்க.  ஆனா, இவன் வீம்புக்குனே வச்சான்... அதுல பாதி யாரும் குடிக்காம கெட்டு போயிடுச்சென வருத்தப்பட்டார்.  இப்ப இருக்குற வீட்ல ஒரு ரூம் மட்டுந்தான் இருக்கு, அதுல குடித்தனம் பண்ண முடியாது வேற வீட்டுக்கு போகணும்னா கையில கொஞ்சம் காசு வேணும்.  அப்புறம் வீட்டுல செல்ஃப் இருந்தாலும் ஒரு பீரோ கட்டாயம் வாங்கிடணும்னு இருக்கேன்னு சொல்லிட்டு இருந்தார்.  சிறிது நேரம் கழித்து தான் புரிந்தது, அவர் சொன்ன ஒரு ரூம் என்பது மொத்த வீடென்று.  

எப்பொழுதும் மனதில் ஆயிரம் கேள்விகள் சம்பந்தமில்லாமல் எழும், அவற்றில் சிலவற்றை இங்கிதம் சற்றுமின்றி கேட்டதும் உண்டு.  ஆனால், இது சத்தம் ஏதுமின்றி சூன்யம் மட்டும் இருப்பது போன்றதொரு நிலை.  நகரம் எப்பொழுதும் போல் நகர ஆரம்பித்தது.

Comments

Popular posts from this blog

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.

அவள் ஒரு தொடர்கதை...

கனவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்  யாருக்கும் தன் கனவு தெரியாதென மமதையில் சுற்றி கொண்டிருக்கிறாள்  அனைவருக்கும் அவள் கனவை தெரியும்  அவர்கள் யாரும் காட்டிக்கொள்வதில்லை  கனவை தெரியுமென காட்டிக்கொள்ள கூடாதென்பது பெரியவர்களுக்கே உரித்தான ஒன்று போல  அறிவாளியான அவளும் கண்டு கொள்வாள் இவர்களின் நிலைப்பாட்டை  எனக்கு தெரியும்  இவளும் காட்டிக்கொள்ள மாட்டாள்!

ரயில் பயணம் ...

குழந்தைகளுக்கே உரித்தான கன்னமது, கொழுக்மொழுக்கென.  பால் கன்னம் என்பார்கள்.  குழந்தைகளின் கன்னங்கள் கிள்ளப்படுவதற்கான முக்கிய காரணி, அவனுக்கும் இருந்தது. இரண்டு வயதிற்கு மேல் இருந்திருக்காது, அவனுடைய அண்ணனும் அம்மாவும் ஜன்னலே கதி என்று கிடக்க, சீட்டில் இவனுக்கு இடம் தாராளமாக இருந்தது. கையில் கவர் பிரிக்காத ஒரு சாக்லேட் வைத்துக்கொண்டு எங்களுக்கு வித்தை காட்டிக்கொண்டு இருந்தான். என்னையும் சேர்த்து நால்வரின் கவனமும் அவன் மீது இருந்ததை   கண்ட  அவனது அம்மா நாங்கள் பார்த்து கொள்வோம் என்றெண்ணி அதன் பின்னர் அவனை கண்டுகொள்ளவில்லை.  அவனுடைய அம்மாவும், அவரது இன்னொரு மகனும் சேர்ந்து ஜன்னலிடம் கதை பேசிக் கொண்டிருந்தனர்.  பின்னர், இருவர் கூட்டணியில் மூன்றாவதாக அவனும் இணைந்து கொண்டான்.  அது இவ்வளவு நேரம் எங்கே மறைந்திருந்தது எங்கிருந்து வந்தது என யோசிக்க கூட எங்களுக்கு அவன் அவகாசம் கொடுக்கவில்லை.  ஆம், அவன் தூங்கிவிட்டான். திண்டுக்கல் ரயில் நிலையம்!? அங்கே மழை பெய்து கொண்டிருந்தது, பெய்து கொண்டே இருந்தது... வருணனுக்கு அன்று மனநிலையில் சிறிது யோசனைகள் போலும்?...