குழந்தைகளுக்கே உரித்தான கன்னமது, கொழுக்மொழுக்கென. பால் கன்னம் என்பார்கள். குழந்தைகளின் கன்னங்கள் கிள்ளப்படுவதற்கான முக்கிய காரணி, அவனுக்கும் இருந்தது. இரண்டு வயதிற்கு மேல் இருந்திருக்காது, அவனுடைய அண்ணனும் அம்மாவும் ஜன்னலே கதி என்று கிடக்க, சீட்டில் இவனுக்கு இடம் தாராளமாக இருந்தது. கையில் கவர் பிரிக்காத ஒரு சாக்லேட் வைத்துக்கொண்டு எங்களுக்கு வித்தை காட்டிக்கொண்டு இருந்தான். என்னையும் சேர்த்து நால்வரின் கவனமும் அவன் மீது இருந்ததை கண்ட அவனது அம்மா நாங்கள் பார்த்து கொள்வோம் என்றெண்ணி அதன் பின்னர் அவனை கண்டுகொள்ளவில்லை. அவனுடைய அம்மாவும், அவரது இன்னொரு மகனும் சேர்ந்து ஜன்னலிடம் கதை பேசிக் கொண்டிருந்தனர். பின்னர், இருவர் கூட்டணியில் மூன்றாவதாக அவனும் இணைந்து கொண்டான். அது இவ்வளவு நேரம் எங்கே மறைந்திருந்தது எங்கிருந்து வந்தது என யோசிக்க கூட எங்களுக்கு அவன் அவகாசம் கொடுக்கவில்லை. ஆம், அவன் தூங்கிவிட்டான். திண்டுக்கல் ரயில் நிலையம்!? அங்கே மழை பெய்து கொண்டிருந்தது, பெய்து கொண்டே இருந்தது... வருணனுக்கு அன்று மனநிலையில் சிறிது யோசனைகள் போலும்?...